முகப்பு
சினிமா

கீபோர்ட் இசைக்கலைஞர் விஜி மேனுவல் மரணம்

இந்தியாவின் தலைசிறந்த கீபோர்ட் பிளேயர் என்று இளையராஜாவிடம் பாராட்டுப் பெற்றவர்.

Updated On : 17 ஆகஸ்ட், 2015 at 12:34 PM
பகிர்:

இளையராஜாவிடம் ஏராளமான படங்களில் பணிபுரிந்த கீபோர்ட் இசைக்கலைஞர் விஜி மேனுவல் (64) சமீபத்தில் காலமானார்.

இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து சமீபகாலம் வரை அவருடன் பணிபுரிந்துள்ளார் விஜி மேனுவல். ராஜாவின் தொடக்கக் காலங்களில் அவர், பேஸ் கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். டார்லிங் டார்லிங் (பிரியா) பாடல் விஜி பேஸ் கிட்டார் கலைஞராகப் பணியாற்றிய பாடல்களில் ஒன்று. அதன்பின்னர் ராஜாவிடம் கீபோர்ட் மற்றும் பியானோ கலைஞராகப் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இவருடைய தந்தை ஹண்டேல் மேனுவலும் ஒரு இசைக்கலைஞர்.

1971-ல் சிறந்த டிரம்மருக்கான பரிசை அகில இந்திய அளவில் வென்றார் விஜி. பிறகு, பேஸ் கிட்டார் கலைஞராக எம்.எஸ்.வி. கே.வி. மகாதேவன், ஜி.கே. வெங்கடேஷ் ஆகியோரிடம் தனது ஆரம்பக் காலத்தில் பணிபுரிந்துள்ளார். வெங்கடேஷிடம் பணியாற்றியபோது கிடார் கலைஞராக இருந்த இளையராஜாவைச் சந்தித்தார் விஜி. இளையராஜா இசையமைப்பாளர் ஆனபிறகு அவரிடம் பணிபுரிய ஆரம்பித்தார். முதலில் பேஸ் கிடார் கலைஞராகவும் பிறகு கீபோர்ட், பியானோ கலைஞராகவும்.

Advertisement

இவருடைய இசைத்திறமை  850 படங்களுக்கும் மேலாக வெளிப்பட்டுள்ளது. ராஜ பார்வை தீம் மியூசிக்கை இவரும் (கீபோர்டு) வி.எஸ். நரசிம்மனும் (வயலின்) இணைந்து வாசித்தார்கள். நீ பார்த்த பார்வைக்கு நன்றி (ஹே ராம்) பாடலுக்கு பியானோ வாசித்தவரும் விஜிதான். இந்தியாவின் தலைசிறந்த கீபோர்ட் பிளேயர் என்று இளையராஜாவிடம் பாராட்டுப் பெற்றவர்.

இரவு சூரியன், இதய வாசல் என இரு படங்களுக்கு விஜி மேனுவல் இசையமைத்துள்ளார். தன்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடிவதில்லை என்கிற மனக்குறை ஏற்பட்டதால் பிறகு வேறு எந்தப் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் மீண்டும் ராஜாவின் இசைக்குழுவில் இணைந்துவிட்டார். இவருடைய மரணத்துக்குத் தமிழ்த் திரையிசை உலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.