சினிமா

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? நடிகர் பிரபு பேச்சு

பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.

எழில்

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் 'பெப்ஸி' யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்கும் படம் 'அசுரகுலம்'. பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனின் பேரன் விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆப்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ட்ரெய்லரை பிரபு வெளியிட்டார். பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குநர் பி.வாசு பேசும்போது 'விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக ,ஒரு பலசாலியாகத்தான் தெரியும். இன்று இங்கே அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன். ஒருஅப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்றுதான். மகன் நன்றாக வரவேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது.

சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது. இன்று  ஒரு படத்துக்கு கதாநாயகன் யார் என்றால் அது கதைதான். படம்தான் நட்சத்திரம். உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான்கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.

கதாநாயக நடிகர்களுககு பெரிய பெரிய கட்அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும். அதற்கு அழகுப்படுத்தி மாலை  எல்லாம் போடுவார்கள். பாலாபிஷேகம் செய்வார்கள். அந்த கட்அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும்; நிறைய ஆணிகள் இருக்கும்; கயிறுகள் இருக்கும். அவர்கள்தான் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் அதை மறந்து விடக் கூடாது’ என்றார்.

நடிகர் பிரபு பேசும்போது 'நான் 1978-ல் 'திரிசூலம்' படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல், ஜெயமணி இருவரும்தான் டூப் போடுவார்கள். இவர்களிடயே உயரமாக இன்னொருவர் இருப்பார், அவர்தான் பெப்ஸி விஜயன். அப்போது அப்பாகூட இவர் வேலை செய்வதைப் பார்த்து 'இவன் பெரிய ரவுண்ட் வருவான் 'என்று பாராட்டுவார்.

மாஸ்டராக இவருக்கும் எனக்கும் 'சங்கிலி' முதல்படம். அந்தப் படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் 25 போடு போட்டார். இது பற்றிக் கேட்டபோது அப்பா சொன்னார் 'இவன் படுத்திய பாடு தாங்காமல் போட்டேன் இதுதான் சமயம் போடுவதற்கு' என்றார்.

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.

இந்த சபரிஷின் அப்பா கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்து உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT