விசாரணை படத்துக்கு வெனீஸ் திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு கண்ணீரை வரவழைத்தது என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல் ஆகியோர் நடித்துள்ளளார்கள்.
இந்தப் படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
72-ஆவது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற விருது அறிவிப்பு விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது. படத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்துக்கு வெனீஸ் திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு குறித்து இயக்கு வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியதாவது: விமரிசகர்களும் மக்களும் படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். எட்டு நிமிடங்கள் ஸ்டாண்டிங் ஓவேஷன் (படம் முடிந்தபிறகு பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக எழுந்துநின்று கைதட்டுவது) கொடுத்தார்கள். அதைப் பார்த்த சந்திரகுமார், சமுத்திரகனி, வினோத் குமார் போன்ற என் குழுவினர் கண்ணீர் விட்டு அழுதோம். தமிழ்த் திரையுலகைப் பற்றி தெரிந்துகொள்ள பார்வையாளர்களுக்கு மிகவும் ஆவல் ஏற்பட்டது. உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மேலும் ஒரு வெற்றி இது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.