முகப்பு
சினிமா

புலி படத்தை பாகுபலியுடன் ஒப்பிடுவது குறித்து ஸ்ரீதேவி பதில்!

புலி படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. என்னிடம் பேசுபவர்கள் எல்லாம் படம் பார்க்க மிகவும் ஆவலாக

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் புலி எனக்கு ஸ்பெஷல் என்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் - புலி. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி வெளிவரவுள்ளது.

நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் நடிக்கும் ஸ்ரீதேவி புலி படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது:

புலி படக்குழுவினர் என்னை ராணி மாதிரி நடத்தினார்கள். நான் முன்பு படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஸ்டூடியோக்களுக்கு மீண்டும் சென்றபோது பழைய நினைவுகள் வந்தன.

புலி படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் அருமையானது. வாழ்க்கையில் ஒருமுறைதான் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைக்கும். கிடைத்தவுடன் தாமதிக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டேன். இதற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

விஜய், அஜீத் போன்ற நடிகர்கள் என்னைப் போன்ற சீனியர் நடிகைகளுடன் நடிப்பது நல்ல விஷயம். (ஸ்ரீதேவி, அஜீத்துடன் இங்கிலீஷ், விங்கிலீஷில் நடித்தார்). விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். எந்தவொரு விவாதமும் படப்பிடிப்பில் இருக்காது. எல்லாம் அமைதியாக நடக்கும். விஜய், கவும் ஆர்வத்துடன் நடிப்பார். இது அவருடன் நடிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் என்றார் ஸ்ரீதேவி.

புலி படத்தை பாகுபலியுடன் ஒப்பிடுவது குறித்து ஸ்ரீதேவி கூறும்போது, ஒவ்வொரு படத்துக்கும் ஒரு அழகு உள்ளது. ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படுகிறது. புலி படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. என்னிடம் பேசுபவர்கள் எல்லாம் படம் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இதுமாதிரியான ஃபேண்டஸி படத்தைத் தமிழ் சினிமா பார்த்ததில்லை. இது அனைவருக்குமான படம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.