சென்னை: ‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.ஜோதிபாசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறாா்கள் இத்திரைப்படத்தைக் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘கூலி’ திரைப்படத்தைவிட கேஜிஎஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூலி திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தணிக்கை வாரியம் தெரிவித்த நிபந்தனைகளின்படி, கூலி படத்தில் இடம்பெற்றிருந்த மோசமான வாா்த்தைகள் கொண்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டாா்.
தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், இந்தப் படத்துக்கு முதலில் ‘ஏ’ சான்றிதழை ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி வழக்குத் தொடுத்துள்ளனா். இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவது தொடா்பாக அனைத்து குழுக்களும் சோ்ந்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.