திலீப் சிறை செல்ல தமது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணமா? என்பதை மலையாள நடிகர் திலீப் செய்தியாளர்களுடன் பேசுகையில் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2017-இல் பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கிலிருந்து இன்று(டிச. 8) விடுதலை செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் எர்ணாகுளம் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது செய்தியாளர்களுடன் பேசியதாவது, “இந்த வழக்கில் குற்றச்சதிச் செயல் தீட்டப்பட்டிருப்பதாக முதல்முதலில் கருத்து தெரிவித்தது மஞ்சு வாரியர்தான். அதனைத்தொடர்ந்தே, எனக்கு எதிராக என் மீதான சதி ஆரம்பமானது.”
“அவர்கள் (போலீஸார்) ஒன்றிணைந்து முதன்மைக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் (பல்சர் சுனி) மற்றும் அவருடைய கூட்டாளிகள் ஆகியோருடன் கைகோத்து எனக்கு எதிராக போலியான கதையை சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டனர். ஆனால், அந்தக் கட்டுக்கதையெல்லாம் நீதிமன்றத்தில் பயனற்றுப்போனது.
உண்மையில், சதித்திட்டம் தீட்டப்பட்டது நடிகைக்கு எதிராக அல்ல; எனக்கு எதிராகத்தான். இந்த சுமார் 9 ஆண்டுகளில், சமூகத்தில் எனது பிம்பமும் மரியாதையும் எனது வாழ்க்கையும் சீரழிக்கப்பட்டுவிட்டது” என்றார்.
நடிகை மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்செயல் நிகழும் முன், கொச்சியில் மலையாள திரையுலகைச் சேர்ந்த சில நடிகர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். நடிகர்களின் இந்தச் சந்திப்பின்போது, திலீப்பும் உடனிருந்தார். இந்த நிலையில், இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு மஞ்சு வாரியர் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய பின் கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
கடந்த 1998-இல் திருமணம் செய்து கொண்ட திலீப் - மஞ்சு வாரியர் தம்பதி கருத்து வேறுபாட்டால் கடந்த 2015-இல் விவாகரத்து பெற்றனர். அதன்பின், பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமனம் செய்து கொண்டார். இந்த நிலையில், காவ்யா மாதவனுடனான திலீப்பின் நெருக்கமே தாங்கள் இருவரும் விவாகரத்து பெற காரணமென மஞ்சு வாரியர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை பாலியல் வழக்கில் மஞ்சு வாரியரின் கருத்துகள் முக்கிய திருப்புமுனையாக இருந்ததும் கவனிக்கத்தக்கது. இதனையடுத்து இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவுடன், முதல் ஆளாக தனது முன்னாள் மனைவி மீது பகிரங்கமாக விமர்சனத்தை சுமத்தியுள்ளார் திலீப்.
நடிகை மீதான பாலியல் அத்துமீறல் குற்ற வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட ஏ1 முதல் ஏ 6 வரை குற்றவாளிகள் என்றும், ஏ8-ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.