செய்திகள்

கேவலமாகப் பேசிய இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும்: நடிகை தமன்னா கொந்தளிப்பு!

எழில்

கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சிகரமாக நடித்தது ஏன் என்பதற்கு அப்பட இயக்குநர் சுஜார் அளித்த விளக்கத்துக்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் சுராஜ், கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சியாக நடித்தது ஏன் என்பதற்கு ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

நாங்கள் லோ கிளாஸ் ரசிகர்கள். ஹீரோ சண்டை போடுவதற்கும் ஹீரோயின் கவர்ச்சியாக நடிப்பதற்குமே ரசிகர்கள் பணம் கொடுத்துப் படம் பார்க்கிறார்கள். நடிகைகளும் கோடிகளில் பணம் வாங்குகிறார்கள். எனவே ஒரு நடிகை, புடவை கட்டி மூடி நடிப்பதை நான் விரும்பமாட்டேன். மக்கள் இலவசமாக அல்ல, பணம் கொடுத்து படம் பார்க்கிறார்கள். 

கமர்ஷியல் படங்களில் கதாநாயகி கவர்ச்சியாகவே நடிக்கவேண்டும். என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர், நடிகையின் உடையை அவருடைய முழங்கால் வரை இருப்பதுபோல கொண்டுவந்தால் நான் அந்த உடையின் உயரத்தைக் குறைக்கச் சொல்வேன். இல்லை, இதனால் நடிகை வருத்தப்படுவார் என்று சொன்னாலும் நான் சொன்னபடி உடையை மாற்றவைப்பேன். ரசிகர்கள் இதுபோன்ற உடைகளில் நடிகைகளைக் காணவே விரும்புகிறார்கள். நடிகைகள் தங்கள் நடிப்புத் திறமையை டிவி சீரியல்களில் காண்பித்துக்கொள்ளலாம் என்று பேட்டியளித்தார்.

சுராஜின் இந்தப் பேட்டிக்கு நடிகை நயன்தாரா முதலில் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகை தமன்னாவும் ட்விட்டரில் இதுகுறித்து தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

இது 2016. பெண் முன்னேற்றம் குறித்து பேசும் டங்கல் போன்ற ஒரு படத்தின் காட்சியிலிருந்து பாதியில் வந்து இந்த விவகாரத்தை எதிர்கொள்கிறேன். இயக்குநர் சுராஜின் பேட்டி கண்டு மனமுடைந்துள்ளேன். கோபமாகவும் உள்ளேன். அவர் என்னிடம் மட்டுமல்ல, இந்தத் துறையில் உள்ள அத்தனை பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் நடிகர்கள், நடிப்பினால் ரசிகர்களை ரசிக்கவைக்கவே விரும்புகிறோம். மற்றபடி ஒரு பண்டம் போல எங்களை நடத்தவேண்டியதில்லை.

11 வருடங்களாக தென்னிந்தியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு விருப்பமான உடைகளில் மட்டுமே நடித்துள்ளேன். பெண்களை அற்பமான முறையில் பேசியதைக் கண்டு வருத்தப்படுகிறேன். சினிமா ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை வைத்து இந்தத் துறையை பொதுமைப்படுத்திவிடவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT