இந்த மாதம் இன்னொரு விஜய் சேதுபதி படம் வெளிவருகிறது!
அப்படி எதுவும் திட்டமிடவில்லை என்று விஜய் சேதுபதி விளக்கமளித்தாலும்...
மாதம் ஒரு விஜய் சேதுபதி படமாவது வெளிவந்துவிடுகிறது. அப்படி எதுவும் திட்டமிடவில்லை. யாராலும் அதுபோல நடித்து தொடர்ச்சியாக படங்களை வெளியிடமுடியாது என்று விஜய் சேதுபதி விளக்கமளித்தாலும் நிலைமை என்னவோ அவரைக் கண்டு ஆச்சர்யப்படும் அளவுக்குத்தான் உள்ளது.
மெல்லிசை என்று ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போது புரியாத புதிர் என்று புதிய பெயருடன் வெளிவர உள்ளது. விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கியுள்ள புரியாத புதிர் இந்த மாதம் 25-ம் தேதி வெளிவர உள்ளது.
இது விஜய் சேதுபதி நடித்து இந்த வருடம் வெளியாகும் ஏழாவது படமாகும். இதற்கு முன்பு காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என விஜய் சேதுபதியின் 6 படங்கள் வெளிவந்துள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவண் என்கிற படத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. அந்தப் படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கெனவே நடித்து முடித்து நீண்டநாள்களாக வெளியாகாமல் உள்ள இடம் பொருள் ஏவல் படமும் இந்த வருடம் வெளியாக வாய்ப்புள்ளது.
இதற்கு அடுத்ததாக ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம், புஷ்கர் - காயத்ரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வட சென்னையிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.