முகப்பு
செய்திகள்

பிக் பாஸுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவரும் படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா, விஷ்ணு விஷாலின் ஜோடியாக...

Updated On : 8 ஆகஸ்ட், 2017 at 1:30 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:32 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா, விஷ்ணு விஷாலின் ஜோடியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.  

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான நடிகர் ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார். இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேறினார் ஓவியா. 

Advertisement

இதன்படி சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஓவியா போட்டியிலிருந்து வெளியேறும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா, அடுத்த நாள் சென்னையில் உள்ள சிட்டி செண்டருக்குச் சென்றார். அங்கு ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ரசிகர்களிடம் உரையாடிய ஓவியா, நிகழ்ச்சி குறித்தும் பேசினார்.

இதற்கடுத்ததாக ஓவியா நடித்துவரும் படங்கள் மீது கவனம் குவிந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த புகழுக்குப் பிறகு அவருக்குப் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுக இயக்குநர் செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் - சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்தப் படத்தில் ஓவியா நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக ரெஜினாவும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுதவிர போகி என்கிற படத்திலும் ஓவியா நடித்துவருகிரார். பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்கும் முன்பே இவ்விரு படங்களிலும் நடிக்க ஓவியா ஒப்பந்தமானார்.

களவாணி படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான ஓவியா, கடந்த வருடம் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. 2015-ல் அவர் நடிப்பில் சண்டமாருதம், 144 ஆகிய தமிழ்ப் படங்களும் கடந்த வருடம் ஹலோ நான் பேய் பேசுறேன் என்கிற படமும் மட்டுமே வெளிவந்தன. தமிழில் வாய்ப்புகள் குறைவாக உள்ள சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஓவியா உச்சக்கட்டப் புகழை அடைந்துள்ளார். இதனால் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவரும்போது ஓவியா ரசிகர்கள் அப்படத்துக்கு அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.