முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை

விஜய் சேதுபதி நடித்து வெள்ளிக்கிழமை (செப்.1) வெளியாகவுள்ள 'புரியாத புதிர்' திரைப்படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

Updated On : 1 செப்டம்பர், 2017 at 2:26 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:17 PM

விஜய் சேதுபதி நடித்து வெள்ளிக்கிழமை (செப்.1) வெளியாகவுள்ள 'புரியாத புதிர்' திரைப்படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெஃப்சி) பொதுச் செயலர் அங்கமுத்து சண்முகம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' படம் வெள்ளிக்கிழமை (செப்.1) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் பணியாற்றிய பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான சம்பளத் தொகையான ரூ. 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 வழங்கப்படவில்லை. இந்த தொகையை வழங்காமல், இந்தப் படத்தை செப். 1 ஆம் தேதி திரையிடுவதற்கு ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் திட்டமிட்டுள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, 'புரியாத புதிர்' படத்தை வரும் 14ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும், எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.