முகப்பு
செய்திகள்

காலா வழக்கு: ரஜினி பதில் மனு தாக்கல்!

இந்த படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையை சேர்ந்த ராஜசேகரன் என்பவர்...

Updated On : 20 ஜூலை, 2017 at 2:33 PM
பகிர்:

'காலா' படத்துக்கு தடை கோரிய மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனுஷின் பட தயாரிப்பு நிறுவனம் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4- ஆவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஜூன் 16- ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜூன் 23- ஆம் தேதி படக்குழுவினரின் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி, இந்த மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் கோரினர். அதை ஏற்ற நீதிபதி அவகாசம் வழங்கினார். இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காலா படக்குழுவினர் மும்பை படப்பிடிப்பில் இருப்பதால், மனு குறித்து பதிலளிக்க மேலும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என படக்குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, மனுவுக்கு படக்குழு பதிலளிக்க இரண்டாவது முறையாக மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியதோடு, விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

இந்நிலையில் 'காலா' படத்துக்கு தடை கோரிய மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனுஷின் பட தயாரிப்பு நிறுவனம் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

அதில், விளம்பர நோக்கத்துக்காக காலா படத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 1996ல் பதிவு செய்த கரிகாலன் என்கிற தலைப்பை 2006-ல் மனுதாரர் புதுப்பிக்கவில்லை. தேவையில்லாமல் ரஜினியை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள். மனுதாரரின் குற்றச்சாட்டுக்கும் படத்துக்கும் தொடர்பு கிடையாது. விளம்பரத்துக்காக தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று பதில் மனு அளித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.