முகப்பு
செய்திகள்

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் இயக்குநர்!

படத்தில் வரும் அந்தப் பட்டப்பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு...

Updated On : 10 மார்ச், 2017 at 12:16 PM
பகிர்:

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டதற்குப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். இதையடுத்து டைட்டில் கார்டில் இருந்து லாரன்ஸுக்கு வழங்கப்பட்ட பட்டம் நீக்கப்படும் என்று பட இயக்குநர் உறுதி அளித்துள்ளார். 

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படம் தற்போது "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி, "மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜீவா நடிப்பில் வெளிவந்த "சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.   

இந்நிலையில் படத்தின் டைட்டில் கார்டில் லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்துப் பலரும் லாரன்ஸை விமரிசனம் செய்து வருகிறார்கள். 

Advertisement

இதையடுத்து லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் கூறியதாவது: இயக்குநர் எனக்கு ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது என்று சொன்னார். டைட்டில் கார்டில் எனக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது. இந்தப் பட்டத்துக்கு நான் உரியவன் அல்லன் என்று நினைக்கிறேன். ரஜினி சாரை நான் தலைவனாக நினைப்பவன். அவர்தான் என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போது அவருக்கு மட்டும்தான். என் தாய் அளித்த பெயரை விட எனக்குப் பெரிய பட்டம் எதுவும் இல்லை. என் தாய் பெயருடன் சேர்த்து கண்மணி ராகவா லாரன்ஸ் என்றே என் பெயர் இனிமேல் டைட்டில் கார்டில் இடம்பெறும் என்றார்.

லாரன்ஸின் பதிவுக்குப் பிறகு இயக்குநர் சாய்ரமணி இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: லாரன்ஸின் நற்செயல்களையும் மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். இந்தப் பட்டம் அவரை ஆச்சர்யப்பட வைக்கவில்லை. என்னைக் கூப்பிட்டுக் கண்டித்தார். உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்று தனக்கு இந்தப் பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்தில் வரும் அந்தப் பட்டப்பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.