செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

DIN

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதையல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதை நடிகர் தனுஷ் தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "எனது தந்தையை நிழல் உலகதாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்தரித்துப் படம் எடுக்கக்கூடாது. அவரை எந்தவொரு நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. அவரைப் பற்றிய படமென்றால் என்னிடம் வாருங்கள். அவருடைய முழுக்கதையையும் உங்களுக்குச் சொல்கிறேன்.
அவரது வாழ்க்கையை எனக்கும் சினிமாவாக எடுக்க ஆசையுள்ளது. ஆகையால், அவரை நீங்கள் தவறாக சித்திரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ள நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினிகாந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தைப் பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.
அந்த செய்தியின் அடிப்படையாகக் கொண்டு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா இது தொடர்பாக ரஜினிகாந்த்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இந்தப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.
குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவருடைய குடும்பப் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.
இது குறித்து படத்தின் இயக்குநர் ரஞ்சித் தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது ஹாஜி மஸ்தான் குறித்த கதையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஹாஜி மஸ்தான் பற்றிய கதை என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT