முகப்பு
செய்திகள்

ட்விட்டரில் அமலா பால் - ஆர்யா சுவாரசிய உரையாடல்!

வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் நடிகர்கள் ஆர்யாவும் அமலா பாலும் சுவாரசியமாக உரையாடியுள்ளார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் நடிகர்கள் ஆர்யாவும் அமலா பாலும் சுவாரசியமாக உரையாடியுள்ளார்கள்.

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இவை இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். புதுச்சேரி திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து தந்துள்ளார். இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றார்.

இன்ஸ்டகிராம் தளத்தில்,  தன்னை விமர்சிப்பவர்களுக்கு மறைமுகமாகப் பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு எழுதி படகுச் சவாரி செய்வது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் அமலா பால். அதில் அவர் கூறிய்யதாவது: 

சிலசமயங்களில் இந்த நகர வாழ்க்கையிலிருந்தும் ஊகங்களிலிருந்தும் தப்பி ஓட நினைக்கிறேன். தற்போதைக்குப் படகுச் சவாரி செய்கிறேன். இதனால் குறைந்தபட்சம் சட்டத்தை மதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இல்லை என்று தன் மீதான விமரிசனங்களுக்குக் கிண்டலாகப் பதிவு எழுதினார். கூடவே படகுச் சவாரி, பதிவுதேவையில்லை போன்ற ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தினார். 

அமலா பாலின் இந்தப் பதிவுக்கு ட்விட்டரில் ஆர்யா பதில் கொடுத்தார். அவர் கூறியதாவது: சாலை வரியைச் சேமித்தால் கடைசியில் படகுச் சவாரியில்தான் முடியும். சும்மா கிண்டல் செய்கிறேன். கேரள தினத்துக்கு வாழ்த்துகள் என்றார்.

இதற்குப் பதில் அளித்த அமலா பால், உடற்பயிற்சிகளால் உடலைக் கஷ்டப்படுத்தி வாழ்க்கை முழுக்க உங்களுடைய ஒவ்வொரு பணத்தையும் சேமிப்பது போலவா.. வேடிக்கைக்காகச் சொல்லவில்லை என்றார். 

இதற்கு ஆர்யாவின் பதில் - உங்களுக்காகத்தான் அனைத்தையும் சேமிக்கிறேன். காதல் கொள் அமலா... வேடிக்கைக்காகச் சொல்லவில்லை என்று வேடிக்கையாகப் பதில் அளித்தார். உடனே அமலா பால், கிண்டல் செய்தது போதும் என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.