செய்திகள்

தலையைக் கொய்து கணவனுக்கு நினைவுப் பரிசளித்த ராஜபுத்திர இளவரசி கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா!

சரோஜினி

2015 ல் வெளியான  ‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படத்தில் காஷிபாயாக ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். காஷிபாய், சத்ரபதியின் அதிகாரத்தின் கீழிருந்த மராட்டிய பேஷ்வா பாலாஜி விஷ்வநாத்தின் முதல் மனைவி. சரித்திரப் புகழ் மிக்க இந்தக் கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்ததில் அவருக்கு அந்தத் திரைப்படம் வாயிலாக நற்பெயர் கிடைத்திருந்தது.

படத்தின் டைட்டிலில் இடம் பெற்றுள்ள மஸ்தானி கதாபாத்திரத்தில், மற்றொரு நடிகையான தீபிகா படுகோன் நடித்திருந்தாலும் கூட காஷிபாய் வேடத்தில் நடித்த ப்ரியங்காவின் நடிப்பும் இதில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அப்போது கிடைத்த பாராட்டை ஒட்டி மேலும் சரித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆர்வம் ப்ரியங்காவிடம் அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சரித்திரப் புகழ் மிக்க கதாபாத்திரத்தில் ப்ரியங்கா நடிக்கவிருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் உலவுகின்றன.

ப்ரியங்கா ஏற்று நடிக்கவிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ஹதி ராணி. 

ஹதி ராணி, ஹதா ராஜபுதனப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளவரசி. அவளை மேவாரின் சலூம்பர், சந்தாவத் ராஜபுதன அரசின் படைத்தலைவரும், இளவரசருமான ஒருவருக்கு மணம் செய்விக்கிறார்கள். இவர்களது விவாகம் முடிந்த மிகச்சில நாட்களிலேயே மேவார் ராஜபுத்ர அரசுகளுக்கும், முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் படைகளுக்கும் இடையே கி.பி 1653- 1680 காலகட்டத்தில் பெரும்போர் மூள்கிறது. போரில் தலைமையேற்க திருமணமாகி சில நாட்களே ஆன தன் மகனை அழைக்கிறார் மேவார் அரசர்.

இளவரசருக்கோ, தனது இளம் மனைவியை விட்டு விட்டு போருக்குச் செல்லத் தயக்கம். ஆனாலும் தந்தையும் அரசருமானவரின் அழைப்பையும், கட்டளையையும் புறக்கணித்து விட முடியாது. அது ராஜபுத்திரப் பரம்பரைக்கு பெரும் இழுக்கு! எனவே மனைவியிடம் வந்த இளவரசர்;

‘நான் போருக்குச் சென்று தான் ஆக வேண்டும்... ஆனால் அங்கே உன் பிரிவு என்னை வாட்டாமல் இருக்க உன்னை நினைவுபடுத்தும் விதமாக எனக்கு ஏதாவது நினைவுப் பரிசளித்து அனுப்பு கண்ணே!’

- என்று விண்ணப்பிக்கிறார்.

ராஜபுத்திர இளவரசர்களும், அரசர்களும் மட்டுமல்ல, ராஜபுத்திர இளவரசிகளும் கூட வீரத்திற்கும், தீரச்செயல்களுக்கும் பெயர் போனவர்களே! என்பதால், கணவன் தன் நினைவால் சரியாகப் போர் செய்யாது போய் விடுவாரோ என்ற துயர நினைவுகள் வாட்ட  ‘ஹதி ராணி’ உடனே தனது சிரசைக் கொய்து அதையே தன் கணவனுக்கு நினைவுப் பரிசாக அளித்து விடுகிறார்.

மனைவியின் இந்த நினைவுப் பரிசால் ஒரு நொடி திகைத்து, திக்கித்துப் போனாலும் பிற்பாடு அவளது தியாகத்தை உணர்ந்து கொண்ட இளவரசர் மனைவி அளித்த நினைவுப் பரிசை அவளது கூந்தலைக் கொண்டு தன் கழுத்தில் மாலை போலக் கட்டிக் கொண்டு போர்க்களத்திற்குச் சென்று முகலாயப் படைகளை எதிர்த்து தீரத்துடன் போரிடுகிறார். போர் இறுதியில் மனைவியின் தியாகம் வெல்கிறது. ஆம், மேவார் அந்தப் போரில் வெல்கிறது.

ஆனால் மனைவி போன பின் வாழ்வதற்கான குறிக்கோள்கள் சிதைந்து விட்டதாக எண்ணிய மேவார் இளவரசர் வெற்றிக் களிப்பு மாறும் முன்பே போர்க்களத்தில் மண்டியிட்டு தன் வாளால் கழுத்தை வெட்டிக் கொண்டு வீர மரணம் அடைந்து விடுகிறார்.

இது சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு உண்மைச் சம்பவம்.

இந்தச் சம்பவம் தான் ப்ரியங்கா நடிப்பில் திரைப்படமாக இருக்கிறதாம்.

படக்குழு சார்பாக அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், ஹதி ராணி வேடத்தில் நடிக்கத் தான் ஆர்வமுடன் இருப்பதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் கசிந்துள்ளன. படத்தை இயக்கவிருப்பது தென்னிந்தியாவைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT