சரவணா ஸ்டோர்ஸ் அதிபருடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கவுள்ள ஓவியா!
கடந்தமுறை சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் இணைந்து ஹன்சிகா, தமனா ஆகியோர் விளம்பரத்தில் நடித்தார்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றுள்ள நடிகை ஓவியா, அடுத்ததாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதினார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருளுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தமுறை சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் இணைந்து ஹன்சிகா, தமனா ஆகியோர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்கள். தற்போது, அவர்களுக்குப் பதிலாக ஒப்பந்தமாகியுள்ளார். ஓவியா - அருள் பங்கேற்கும் விளம்பரம் ஆயுத பூஜை சமயத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்க ஓவியா ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் இந்த விளம்பரம் மூலமாகத் தோன்றவுள்ளார்.