முகப்பு
செய்திகள்

மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பியபோது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பியபோது காரில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். காரில் சுமார் 2 மணி நேரத்துக்கு அவருக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்த மர்ம நபர்கள், பின்னர் அவரை இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி போலீஸார் கைது செய்தபோது காவ்யாவிடமும், அவரது தாயாரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கைதுக்குப் பிறகு அலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுக்கள் நடுவர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. தற்போது 4-ஆவது முறையாக தனது ஜாமீன் மனுவை அவர் அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அளித்தார். அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் திலீப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில், அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதலில் திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் முதலாவதாக திலீப் தாக்கல் செய்த மனு மீது கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தச் சம்பவத்தில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் செல்லிடப்பேசி இன்னமும் கைப்பற்றப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையேற்றுக் கொண்ட கேரள உயர் நீதிமன்றம், திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. எனினும், கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பில் சிலீடப்பட்ட உரையில் ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நடிகர் தீலிப் சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர் என்பதால், ஆதாரங்களைச் சேதப்படுத்தவும், சாட்சிகளை கலைப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சுனில் தாமஸ் கூறுகையில், 'இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய ஜாமீன் மனு விசாரணை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலவரத்தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மனுதாரருக்கு (திலீப்) ஜாமீன் வழங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆதலால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார். 

இந்நிலையில் திலீப்பின் ஜாமீன் மனு, அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திலீப்பின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.