முகப்பு
செய்திகள்

நடிகை காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு!

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி, மலையாள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி, மலையாள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை கேரள உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பியபோது காரில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். காரில் சுமார் 2 மணி நேரத்துக்கு அவருக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்த மர்ம நபர்கள், பின்னர் அவரை இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி போலீஸார் கைது செய்தபோது காவ்யாவிடமும், அவரது தாயாரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கைதுக்குப் பிறகு அலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுக்கள் நடுவர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. தற்போது 4-ஆவது முறையாக தனது ஜாமீன் மனுவை அவர் நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை அளித்துள்ளார்.

இந்தச் சூழலில், இந்த வழக்கு தொடர்பாக அவரது மனைவி காவ்யாவையும் போலீஸார் கைது செய்வார்கள் என்று செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி காவ்யா நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் காவ்யா மாதவனின் முன் ஜாமீன் மீதான விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.