செய்திகள்

கோவளம் கடற்கரையைக் குப்பையாக்கினார்களா? மணி ரத்னம் படக்குழு மீது குற்றச்சாட்டு!

எழில்

கோவளம் கடலோரப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம் படக்குழு, அப்பகுதியைக் குப்பையாக்கிவிட்டுச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. 

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

கடந்த வாரம் சென்னைக்கு அருகே உள்ள கோவளம் கடற்கரையின் அருகே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். பணிகள் முடிந்து படப்பிடிப்புக்குழுவினர் கிளம்பிச் சென்றபிறகு, படப்பிடிப்புக்குப் பயன்படுத்திய இடங்களைப் பார்வையிட்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். உடைந்த பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் அங்கிருந்துள்ளன. ஒரு காரின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. துப்பாக்கித் தோட்டக்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. இதனால் அப்பகுதிக்கு வந்த பலருக்கும் கண்ணாடிகள் கிழித்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. குப்பைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறியவர்கள் அதைச் செய்யாமல் விட்டதால் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள், படப்பிடிப்புக்குழுவினரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரித்துள்ளார்கள். ஃபேஸ்புக்கில் தனக்கு வந்த புகாரையடுத்து, இனிமேல் இதுபோல் நடக்காது என்று உறுதியளித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனாலும் படப்பிடிப்பினால் உண்டான குப்பைகளை அப்புறப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கும் இங்குப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது இதற்காகக் கட்டப்பட்ட அரங்கினால் ஏராளமான குப்பைகள் சேர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள் என்கிற புகார்களும் தற்போது கூறப்படுகின்றன.  

ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியானபிறகு தங்களுடைய படப்பிடிப்பினால் உண்டான குப்பைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தைச் சுத்தம் செய்துதருவதாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் கூறியுள்ளது. எனினும் படப்பிடிப்புக்குப் பிறகு அந்த இடங்களை யாராவது அசுத்தமாக்கியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கோவளம் பகுதியில் படப்பிடிப்பு முடிந்தபிறகு 20 பேரைக் கொண்டு இடத்தைச் சுத்தமாக்கினோம் என்று மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT