செய்திகள்

இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

எழில்

சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்தும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, அதிமுக கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த திரைப்படத்தில் இருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என அந்தக் கட்சியினர் கூறினர். இந்தப் பிரச்னையினால், தமிழகம் முழுவதும் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் முற்றுகை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

அதேவேளையில், தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் குறித்து மோசமாக விமர்சித்து காட்சியமைத்த சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை செம்பியம் சத்ய நாராயணன் தெருவைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையறிந்த முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்ற நிலையில், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில், முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு, இனி வரும் காலங்களில் அரசு கொள்கை முடிவுகளை விமர்சிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் முருகதாஸ் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதைக் கேட்ட உயர்நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த நவம்பர் 28 -ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, ஏ.ஆர். முருகதாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டியிருப்பதால் அரசுத் தரப்பு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT