நடிகை ஸ்ரீதேவி: காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்!
அச்சிறுமியின் சுறுசுறுப்பைக் கண்ட காமராஜர் அருகில் இருந்த கவிஞர் கண்ணதாசனிடம் இந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைக்கலாமே...
சென்னை, பிப்.25: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பனுக்கு சென்னை சிஐடி காலனியில் வீடு இருந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் அடிக்கடி சென்னை, தியாகராய நகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவர் ஒரு முறை 4 வயது சிறுமியாக இருந்த ஸ்ரீதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு காமராஜரை பார்க்கச் சென்றார்.
அழகான அச்சிறுமியின் சுறுசுறுப்பைக் கண்ட காமராஜர் அருகில் இருந்த கவிஞர் கண்ணதாசனிடம் இந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைக்கலாமே என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட கண்ணதாசனும் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சென்று சொல்லவே, உடனடியாக சிறுமி ஸ்ரீதேவி வரவழைக்கப்பட்டு "மேக்கப் டெஸ்ட்' போடப்பட்டு நடிப்பதற்கு தயார் செய்யப்பட்டார். சாண்டோ சின்னப்பா தேவரின் "துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானது இப்படித்தான். அதுதான் அவர் திரையுலக வாழ்க்கையைத் தொடங்க காரணமாகவும் அமைந்தது.
இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.