முகப்பு
செய்திகள்

ஸ்ரீதேவியின் மறைவுக்கு சொந்த ஊரில் அஞ்சலி!

ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன். இவர், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவருக்கு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:20 PM
பகிர்:

திரைப்பட நடிகை ஸ்ரீ தேவி மரணம் அடைந்ததையொட்டி, அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் மீனம்பட்டி கிராமத்தில், அவரது உருவப்
படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


நடிகை ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன். இவர், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவருக்கு, சிவகாசி வட்டம் மீனம்பட்டியில் பூர்வீக வீடு உள்ளது. இவரது உறவினர் ராமசாமி, சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ராமசாமியை ஆதரித்து, ஸ்ரீ தேவி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், மும்பை சென்று திருமணம் செய்துகொண்டார். தற்போது, நடிகை ஸ்ரீதேவி துபையில் மரணம் அடைந்த செய்தியறிந்து, அவரது சொந்த ஊரான மீனம்பட்டி கிராமத்து மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
தற்போது, ஸ்ரீ தேவியின் ஒரே ஒரு உறவினர் மட்டுமே மீனம்பட்டியில் வசிப்பதாகவும், அவரும் பணிநிமித்தமாக மும்பை சென்றுவிட்டார் எனவும் போலீஸார் தெரிவித்தனர். இக் கிராம மக்கள், ஸ்ரீதேவியின் சிறு வயது உருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.

இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.