முகப்பு
செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம்: புதிய தகவல்

மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் ஊடகம் தகவல்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:20 PM
பகிர்:

நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.

இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் துபை ஹோட்டல் அறையில், ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது. எனினும் அவருடைய மரணத்தில் சதிச் செயல் எதுவும் இல்லை என்றும் தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தடயவியல் அறிக்கை காவல்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் இந்தியத் தூதரகத்துக்கும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்ஃப் நியூஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.