முகப்பு
செய்திகள்

சீனாவில் மூன்றே நாள்களில் ரூ. 174 கோடி வசூலித்து அமீர் கான் படம் சாதனை!

சீனாவில் அமீர் கானின் இந்தப் படம் தான் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

அமீர் கான் நடித்து தயாரித்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவிலும் இந்தியர்கள் வாழும் இதர நாடுகளிலும் வெளியானது. அத்வைத் சந்திரன் இயக்கத்தில் ஜைரா வாசிம், அமீர் கான் நடித்த இந்தப் படம் தற்போது சீனாவில் வெளியாகி பல சாதனைகளைப் படைக்கும் முனைப்பில் உள்ளது.

உலகிலேயே அதிக திரையரங்குகள் கொண்ட சீனாவில் (41,000 திரையரங்குகளுக்கும் அதிகமாக) தற்போது அமீர் கானின் இந்தப் படம் தான் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று சீனாவில் வெளியான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம், இதுவரை $ 27.22 மில்லியன் வசூலித்துள்ளது. அதாவது முதல் மூன்று நாள்கள் வசூல் ரூ. 174.10 கோடி. சீனாவில் கடந்த வார வசூலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஃபோர்எவர் யங் என்கிற படம் ரூ. 150 கோடி வசூலித்துள்ளது.

முதல் நாளன்று ரூ. 43.35 கோடி வசூலித்த இந்தப் படம் அடுத்த இருநாள்களில் ரூ. 66.81 கோடி ($ 10.45 மில்லியன்), 62.91 கோடி ($ 9.84 மில்லியன்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த வருடம் சீனாவில் வெளியான அமீர் கான் நடித்த டங்கல் படம் ரூ. 1234 கோடி வசூலித்து ($193 மில்லியன்) அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது (அதன் முதல் வார வசூல் - ரூ. 187 கோடி).

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 10 மடங்கு வசூலித்தது டங்கல். இந்நிலையில் டங்கல் பட வசூலை சீக்ரெட் சூப்பர்ஸ்டார் தாண்டுமா என்கிற ஆவலை முதல் மூன்று நாள் வசூல் உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.