செய்திகள்

நடிப்புதான் எனக்கு எல்லாம்: நடிகர் சஞ்சய் சரவணன் பேட்டி

இரும்புத் திரையில் துணை நடிகராக திரையை அலங்கரித்தவர் நடிகர் சஞ்சய் சரவணன். தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தனக்கான ஓர் இடத்தை பிடிக்க போராடி வரும் நிலையில்...

மணிகண்டன் தியாகராஜன்

இரும்புத் திரையில் துணை நடிகராக திரையை அலங்கரித்தவர் நடிகர் சஞ்சய் சரவணன். தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தனக்கான ஓர் இடத்தை பிடிக்க போராடி வரும் சஞ்சய், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அவளும், நானும் சீரியலில் வசந்த் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இதனால், இளைஞர்கள் மத்தியில் நன்கு பரீட்சயமானவார்.

தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவரும் சஞ்சயிடம் உரையாடியதிலிருந்து…

என்னுடைய பூர்வீகம் திருச்சி. எம்பிஏ பட்டப்படிப்பை முடித்த நான், ஆட்டோமொபைல் செக்டாரில் 4 வருடகாலம் பணியாற்றினேன். எனக்கு முன்மாதிரியாக இருப்பவர் என்னுடைய தாத்தா. அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதில் எனக்கு பெருமை. 1932 ஆம் ஆண்டில் நாடக சபா ஒன்றை நடத்திவந்தார். அந்த காலத்தில் மெளனப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரைப்படத் துறையில் அவர் பெரிய அளவில் சாதிக்கமுடியாத ஒன்றை நாம் எப்படியாவது சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இளம் வயதிலேயே தோன்றியது.

ஒரு துறையில் சாதனைப் படைக்கவேண்டும் என்றால் அதற்காக முழுநேரத்தையும் செலவிட்டு அதற்காக உழைக்கவேண்டும். ஆகையால் நான் பணிபுரிந்துகொண்டிருந்த வேலையில் இருந்து விலகினேன். இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது என்னுடைய நெருங்கிய நண்பனாக இருந்தவன் காளி. துணை இயக்குநராக பணிபுரிய வேண்டும் என்று சென்னை வந்துவிட்டான். அவனை நம்பி நானும் சென்னை வந்தேன். ஆனால், அவன் இந்த துறையில் பணியாற்றாமல், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தான். அது எனக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. திரைப்படத் துறைக்குள் நுழையவேண்டும் என்ற ஆசை மட்டுமே எனக்குள் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று மட்டுமே எனக்குத் தோன்றியது. ஆகையால், ஒரு வருட காலம் வாய்ப்பிற்காக பல இடங்களுக்கு அலைந்தேன். பல கஷ்டங்கள், தடைகள் என வரிசையாக வந்தன. அந்த சமயத்தில் ரஜிர் என்னும் ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டார். கூத்துப்பட்டறையில் பயின்றுவந்த ரஜீர் எனக்கு தினமும் நடிப்பு கற்றுத் தந்தார். நடிப்பு குறித்து அவரிடம் இருந்து அதிகம் கற்றறிந்தேன்.

முதல் வாய்ப்பே ஏமாற்றம்

ஒரு முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தவரின் நட்பு எனக்கு கிடைத்தது. அந்த இயக்குநரின் படத்துக்கான நடிகர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததை அவர் மூலம் அறிந்துகொண்டேன்.  நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க தேர்வானேன். அந்த படம் எனக்கு வாழ்க்கையை புரட்டிப்போடும் என்றும், இது திருப்புனையாக அமையும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை அளித்தனர். நானும் பெரும் ஆவலுடன் படத்தில் நடித்து முடித்தேன். ஆனால் படம் வெளியானபோது நான் நடித்த காட்சி எதுவுமே இல்லை.

இரண்டு வருடமாக நான் காத்திருந்து, அந்த படத்திற்காக  உழைத்தது வீணானது. அதனால் துவண்டுபோகாமல், மீண்டும் எனக்கான வாய்ப்பைபெற முயற்சித்தேன். அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பு தான் “கெளரவம்” படம்.

ஒருமுறை இயக்குநர் ராதா மோகன் அவர்கள் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். கெளரவம் படத்தின் இரண்டு மொழிகளிலும் மன்வீர் சிங் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் மூலமாகதான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் எளிதில் கிடைத்தன. இதற்காக ராதா மோகன் அவர்களுக்கும்,  அருள் என்பவருக்கும் நான் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இல்லையெனில், நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.

அதன்பிறகு, பூலோகம், மீகாமன், கவண் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவண் படத்திற்கு பிறகு எனக்கு அவளும் நானும் என்ற ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 8 வருட காலமாக வெள்ளித்திரையில் முடிந்த அளவிற்கு கடுமையாக உழைத்தேன். எனினும் அதற்கான அங்கீகாரம் அங்கு எனக்கு கிடைக்காமலேயே போனது. ஆகையால் சின்னத்திரையிலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

சஞ்ஜய் என்ற பெயரை அறியாதவர்கள் இந்த சீரியலின்மூலம் வசந்த் என்ற பெயருடன் என்னை அழைக்கின்றனர். இப்படி ஒருவன் திரையுலகத்தில் இருப்பதை இந்த சீரியல், மக்களிடம் வெளிகொண்டுவந்துள்ளது.

நடிப்புக்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் நல்ல இடத்தை அடைவேன் என்று நம்பிக்கை உள்ளது. எனக்கு நடிப்புதான் எல்லாமே என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சஞ்சய் சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT