செய்திகள்

இளையராஜாவிடம் கடைசியாகச் சேர்ந்ததும் முதலில் பிரிந்ததும் கே. பாலசந்தர் தான்: கரு. பழனியப்பன் பேச்சு!

எழில்

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரே ஒரு பாலசந்தர் என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கே.பி.யின் சீடர்களும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியதாவது: 

பாலசந்தர்தான் இளையராஜாவிடம் வந்து சேர்ந்த கடைசி இயக்குநர். அப்போது, இளையராஜா தமிழகம் எங்கும் வியாபித்து, கோலோச்சி எல்லா இயக்குநர்களும் அவரிடம் இணைந்து படம் செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்கு, இளையராஜா இல்லாமல் படம் கிடையாது. தயாரிப்பாளர்கள் இளையராஜாவிடம் சென்று தேதிகள் வாங்கியபிறகுதான் படம் தொடங்கும். இளையராஜா படத்தில் இருந்தால் விநியோகஸ்தர் படத்தை வாங்குவார். யார் நடித்திருந்தாலும் தேவையில்லை. இளையராஜா கை வைத்தபடி உள்ள புரொஃபைல் படம் போட்டு ராகதேவன் இசையில் என்று போஸ்டர் ஒட்டினால் போதும், படம் விற்றுவிடும். 

அப்போது வரைக்கும் இளையராஜாவிடம் செல்லாத ஒரே ஒரு இயக்குநர் பாலசந்தர். அவர்தான் இளையராஜாவிடம் கடைசியாக வருகிறார். இணைந்து செய்த முதல் படம் - சிந்து பைரவி. பாலசந்தர் எதற்காகக் காத்திருந்தார் என்றால், இளையராஜாவிடம் செல்ல வேண்டும்தான், ஆனால் எப்படிப் போகவேண்டும் என்றால் அது அவருக்குச் சவால் அளிக்கக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்பதற்காக சிந்து பைரவி படத்துக்குத்தான் செல்கிறார். இளையராஜாவும், இவ்வளவு நாள் இவ்வளவு இயக்குநர்களிடம் படம் பண்ணினோமே, இவரிடமல்லவா நாம் படம் பண்ணியிருக்க வேண்டும், நாமல்லவா இவரைத் தேடிச் சென்றிருக்கவேண்டும், நாம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்பதுபோல அருமையான பாடல்களைத் தருகிறார்.   

இளையராஜா இயக்குநர்களை அவ்வளவாகப் பாராட்டியதில்லை. அவர் ஒருமுறை, இதெல்லாம் நான் யாருக்கு இசையமைக்க முடியும்? இதுபோன்ற சிச்சுவேஷன்களைக் கொண்டுவந்தால்தான் இப்படி இசையமைக்க முடியும் என்று சிந்து பைரவி பாடல்கள் குறித்துக் குறிப்பிடுகிறார். இப்படி பாலசந்தரை இளையராஜா கொண்டாடியது, அவர் இளையராஜாவை விட்டு வெளியே சென்றபிறகு. 

இளையராஜாவிடம் கடைசியாக வந்து சேர்ந்தது மட்டுமல்லாமல் இளையராஜாவை விட்டு உடைத்துக்கொண்டு வெளியே சென்ற முதல் இயக்குநரும்  பாலசந்தர்தான். அந்தச் சமயத்தில் எல்லோரும் இளையராஜாவிடம் இருந்தார்கள். எப்படி விலக்குவது என்று தெரியவில்லை. இளையராஜாதான் சினிமா என்றாகிவிட்டது. இந்த நிலையில் பாலசந்தர்தான் வெளியே வந்தார். 

ஒரு படம் மட்டும் அறிவித்தால் விலகியது தெரிந்துவிடும் என்பதால் ஒரே சமயத்தில் மூன்று படங்களை அறிவிக்கிறார். மூன்று படத்திலும் இளையராஜா கிடையாது. ரோஜா, வானமே எல்லை, அண்ணாமலை ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். ஏ.ஆர். ரஹ்மான், மரகதமணி, தேவா என மூன்று இசையமைப்பாளர்கள் அப்படங்களுக்கு. மூன்று படங்களும் பெரிய வெற்றியை அடைகின்றன. 

தமிழ் சினிமா என்கிற டைனோசர் மெல்ல திரும்பிப் பார்த்தது. ஓ, இளையராஜா இல்லாமல் படம் எடுக்கமுடியுமா, அவரில்லாமல் தமிழ் சினிமாவில் வெற்றியடைய முடியுமா, அது மட்டுமே (வெற்றிச்) சூத்திரம் இல்லையா என்று யோசிக்கிறது. மொத்த அமைப்பையும் உடைப்பது என்பது இதுதான். அதைச் சிறப்பாகச் செய்தவர் பாலசந்தர் என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT