முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்?

ரசிகர்கள் கொண்டாடிய போட்டியாளர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நயன்தாராவுக்குரிய புகழை அடைந்தார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, ஜூன் 17 முதல் ஆரம்பமாகவுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த வருடம் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்குக் கிடைத்த புகழை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள்? பார்க்கலாம்.

அனுயா

பிக் போட்டியிலிருந்து முதல் முதலாக வெளியேறியவர். இதனால் அதன்பிறகு பாதியில் வெளியேறிய பரணிக்குக் கிடைத்த புகழ் கூட இவருக்குக் கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியால் எந்தப் புகழையும் அடையாதவர் என்றும் கூட இவரைக் குறிப்பிடலாம். தமிழில் இவர் நடித்து கடைசியாக வெளியான படம் - நான். வருடம் - 2012. அதற்குப் பிறகு அவர் ஒரு பெங்காலி படத்தில் நடித்தார். 2012-க்குப் பிறகு அனுயா நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. தமிழ் தெரியாததால் எப்படியும் இரண்டு வாரங்களில் வெளியேறி விடுவேன் என நினைத்தேன். அதனால்தான் முதல் வாரத்தில் நான் வெளியேறியபோது அழவில்லை என்று பேட்டியளித்தார் அனுயா. மும்பையில் தற்போது உள்ள அனுயா, ஆவணப் படமொன்றில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. 

ஸ்ரீ

திறமையான இளம் நடிகர், இதில் எப்படி என்கிற ஆச்சர்யத்தை உண்டாக்கினார் ஸ்ரீ. உடல்நிலை காரணமாக ஆரம்பக்கட்டத்திலேயே ஸ்ரீ வெளியேறினார். 2017-ல் மாநகரம் வெளியான பிறகு அடுத்ததாக இவர் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

பரணி

சுவரேறிக் குதித்து மக்களின் அனுதாபங்களை வாங்கிப் பெரும் புகழை அடைந்தார் பரணி. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதற்கு இணையான புகழையும் ரசிகர் கூட்டத்தையும் பெற்றார் என்றும் சொல்லலாம். 2010-க்குப் பிறகு 2016 வரை மூன்று படங்களில் மட்டுமே நடித்தார் பரணி ஆனால் இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டுமே நான்கு படங்கள் வெளியாகின. சசிகுமாருடன் இணைந்து நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார். இந்த வருடம் மேலும் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சக்தி

ஓவியாவுடனான மோதல், காயத்ரி ரகுராமுடனான கூட்டணி என இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அளித்த சுவாரசியங்கள் நிறைய. தந்தை பெரிய இயக்குநராக இருந்தாலும் இவரால் திரையுலகில் இதுவரை பெரிதளவில் முத்திரை பதிக்க முடியவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் இவருக்குப் பெரிய மாற்றங்கள் இதுவரை ஏற்படவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். புதிய பட அறிவிப்புகள் இனிமேல்தான் வரவேண்டும். 

வையாபுரி

எதிர்பாராத விதத்தில் நீண்டகாலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கலகலப்பு 2, பக்கா படங்களில் நடித்தார். இந்த வருடம் இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் திரை வாழ்க்கையில் புதிய திருப்பம் கண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்குக் கிடைத்த புகழ், வரவேற்பு குறித்து வையாபுரி கூறியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கிறேன். குடும்பத்தினருடன் திரைப்படத்துக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தேன். குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள மாலுக்குச் சென்றேன். தகவல் தெரிந்து மாலுக்கு வந்த அனைவரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். என்னால் எந்தக் கடைக்கும் செல்லமுடியவில்லை. ஒன்றரை மணி நேரம் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது. வேறு எதுவும் செய்யமுடியவில்லை. ரசிகர்கள் வருகை அதிகமாகவே, வீட்டுக்குப் போகலாம். இன்னொரு நாள் வந்துகொள்ளலாம் என்று மனைவி சொல்லிவிட்டார். என் வாழ்நாளில் இப்படியொரு புகழையும் ரசிகர்களின் ஆதரவையும் கண்டதில்லை என்று உருக்கமாகக் கூறினார். 

ஆர்த்தி கணேஷ்

பிக் பாஸ் மூலமாகப் புகழடைந்தவர்களில் இவரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவரைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காணமுடிந்தது. கலக்கப்போவது யாரு 5, ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

காஜல் பசுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சின் பிற்பகுதியில் சேர்ந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடித்த கலகலப்பு 2 வெளியானது. 

கஞ்சா கருப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக அமைந்ததில் இவரும் ஒரு முக்கியக் காரணம். பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தார். இந்த வருடம் நிமிர் படம் வெளியானது. மேலும் சில படங்கள் இந்த வருடம் வெளிவரவுள்ளன.

நமீதா

சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவர். டி.ஆரின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிக் பாஸுக்குப் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நமீதாவுக்கும், நடிகரும் தயாரிப்பாளருமான வீரேந்திர சௌத்திரிக்கும் திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலில் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

சுஜா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்தார். வா டீல் படத்திலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அத்தான் அத்தான் என்று உருகிய, 11 வருடங்களாகக் காதலித்து வரும் நடிகர் சிவகுமாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் சுஜா. 

ரைஸா

இது என் மண் அல்ல, என் மொழியல்ல என்று கூறிய பெங்களூரைச் சேர்ந்த ரைஸா இன்று தமிழகம் அறிந்த முகமாகிவிட்டார். பியார் பிரேமா காதல் படத்தில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 

பிந்து மாதவி

பிற்பாதியில் சேர்ந்து எவ்வித சர்ச்சையுமின்றி வெளியேறிய அரிதான போட்டியாளர். இவர் நடிப்பில் பக்கா படம் வெளியானது. புகழேந்தி எனும் நான் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயக்கம் - கரு. பழனியப்பன். 

கணேஷ் வெங்கட்ராம்

ஜெண்டில்மேன் எனப் பலரால் பாராட்டப்பட்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கும் வணங்காமுடி படத்தில் நடித்தார். பிறகு ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். 

ஹரிஷ் கல்யாண்

கடைசிக்கட்டத்தில் வந்து பலருடைய மனத்தையும் கொள்ளை அடித்தவர். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைஸாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

காயத்ரி ரகுராம்

ஓவியாவுடனான மோதலால் பலரால் விமரிசிக்கப்பட்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விமரிசிக்கப்படுகிறார். பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். யாதுமாகி நின்றாய் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

சிநேகன்

பிக் பாஸ் படத்தை வெல்லக்கூடியவர் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் எதிர்பாராதவிதமாக 2-ம் இடத்தையே பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஓவியாவுடன் இவர் நடிப்பதாக இருந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. கமலின் அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக உள்ளார்.

ஆரவ்

நிகழ்ச்சியின் வெற்றியாளர். இதனால் இவருக்குத் திரையுலகில் அதிக வரவேற்பு இருந்தது. இரு படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ஜூலி

ஜல்லிக்கட்டுப் புகழ் ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் ஓவியாவுடன் மோதியதால் யாருமே எதிர்பாராதவகையில் ரசிகர்கள் ஆதரவை இழந்தார். மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உத்தமி என்கிற படத்தில் நடித்து வரும் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 2-வது படமிது. தொலைக்காட்சி நிகழ்சிகளில் அடிக்கடிப் பங்கேற்ற ஜூலி, விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். தமிழகப் பிரச்னைகள் குறித்து தன்னுடைய சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார் ஜூலி.

ஓவியா

ரசிகர்கள் கொண்டாடிய போட்டியாளர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நயன்தாராவுக்குரிய புகழை அடைந்தார் ஓவியா. படவாய்ப்புகள் எக்கச்சக்கமாக வந்தாலும் தற்போது காஞ்சனா 3, 90 எம்.எல்., களவானி 2, முனி 4 ஆகிய 4 படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments