முகப்பு
செய்திகள்

ஆஸ்கர் விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது நடிகை ஸ்ரீதேவிக்கும் நடிகர் சசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது நடிகை ஸ்ரீதேவிக்கும் நடிகர் சசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

உறவினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக துபை சென்றிருந்த ஸ்ரீதேவி, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் திடீரென உயிரிழந்தார். அதையடுத்து, அவரது உடல் பிரதே பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டு வரப்பட்டது. மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார். இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள மீனம்பட்டியில் 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீதேவி. இவரது பெற்றோர் வழக்குரைஞர் அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி. "துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சாண்டோ சின்னப்பா தேவர். தமிழின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீதேவி, 1976-ஆம் ஆண்டு தனது 13 -ஆவது வயதில் இயக்குநர் பாலசந்தரால் "மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.  வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி ஆகியோரின் வரிசையில் சென்னையிலிருந்து மும்பை சென்ற ஸ்ரீதேவி பாலிவுட்டிலும் தனி முத்திரை பதித்தார். முதல் படமான "சோல்வா சாவன்' தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவதாக வெளியான "ஹிம்மத்வாலா' மாபெரும் வெற்றி பெற்று ஹிந்தி உலகில் நட்சத்திர அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது.  அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி சினிமாவின் "லேடி சூப்பர் ஸ்டார்' என்று போற்றப்பட்டார். ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான்கான், ஷாருக்கான் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த ஸ்ரீதேவி பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து மணந்தார். 2013-ஆம் ஆண்டு இந்திய அரசு ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கெüரவித்தது. இதைத் தவிர தமிழக அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை ஸ்ரீதேவி பெற்றுள்ளார். கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், பல முறை ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.

முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவருக்கு வயது 79. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் இதுகுறித்து அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக டயாலிசிஸ் சிகிச்சையை அவர் பல ஆண்டுகளாக பெற்று வந்தார்' என்றார்.

ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனாக கடந்த 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி சசி கபூர் பிறந்தார். கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் சசி கபூர் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், "ஆக்' (1948), "ஆவாரா' (1951) ஆகியவை சசி கபூருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. இதையடுத்து கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார். பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.