புதிய படங்கள் வெளியாகாததால் விஜய், அஜித் படங்கள் மீண்டும் வெளியீடு!
இன்று எந்தவொரு புதிய தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. எனினும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில்...
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், புதுப் படங்களைத் தருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து திரையிடப்படும். புதுப் படங்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களிடம் உரிமையில் இருக்கும் படங்களைத் திரையிடுவோம். இல்லையெனில் மாற்று மொழிப் படங்கள் மற்றும் பழைய படங்களைத் திரையிடுவோம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று எந்தவொரு புதிய தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. எனினும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் விஜய் நடித்த மெர்சல் படம் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர விக்ரம் வேதா, மேயாத மான், வேதாளம், பாட்ஷா, பாகுபலி, விவேகம், தெறி, யாமிருக்க பயமே போன்ற படங்களும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. 5-வது வாரமாக கலகலப்பு 2 படம் தொடர்ந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
இன்று மீண்டும் வெளியான படங்கள்
மெர்சல்
தெறி
வேதாளம்
விவேகம்
பாட்ஷா
விக்ரம் வேதா
மேயாத மான்
ஸ்கெட்ச்
குலேபகாவலி
கருப்பன்
தரமணி
யாமிருக்க பயமே
யாழ்
பாகுபலி
பிரேமம்