சின்னத்திரையில் ஆண்டு வருமானம் 5 மடங்கு அதிகம்: ஆர்.கே. செல்வமணி பேச்சு
பெரிய திரைக்கு நிகரான தொழில்நுட்பக் கலைஞர்கள் சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்...
சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் இணையத்தள தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெஃப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது:
தனித்தனி அமைப்பாக இருந்தாலும் ஒரே இலக்கோடு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்தச் சின்னத்திரை இயக்குநர் சங்கத்தை பெரிய பெரிய இயக்குநர்கள் சேர்ந்து ஆரம்பித்தார்கள். சின்ன விதையாக விதைத்த இந்தச் சின்னத்திரை இன்று ஆலமரமாக தளிர்த்து பெரிதாக வளந்திருக்கின்றது. நமக்குள் வேறுபாடு இல்லாமல் இருக்கிறோம். மிகப்பெரிய வளர்ச்சி என்னவென்றால் பெரிய திரையின் ஆண்டு வருமானத்தைவிட, தமிழ்ச் சின்னத்திரையின் ஆண்டு வருமானம் ஐந்து மடங்கு அதிகம். பெரிய திரைக்கு நிகரான தொழில்நுட்பக் கலைஞர்கள் சின்னத்திரையிலும் இருக்கிறார்கள். ஒரு வலைத்தளமும் ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று கடந்த மூன்று வருடமாக நினைத்துக்கொண்டிருந்தோம். இப்போது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். அடுத்து இணையத்தளம் ஆரம்பிப்பதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் என்றார்.