முகப்பு
செய்திகள்

எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம்!

வேலைக்காரன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா...

Updated On : 9 மே, 2018 at 11:58 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்காரன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இதற்கு முன்பு அவர் நடித்திருந்தார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், சைரா நரசிம்ம ரெட்டி, கோகோ, விசுவாசம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இயக்குநர் எம்.ராஜேஷ் சமீபத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை இயக்கியதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

Advertisement

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சீமராஜா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். விநாயகர் சதுர்த்தி
அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. அறிவியல் தொடர்பான நவீனக் கதை என்பதால் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில் மூன்றாவதாக எம். ராஜேஷின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.