முகப்பு
செய்திகள்

சர்கார் பட வழக்கில் சமரசம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சர்கார் படத்தின் கதை தொடர்பான வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார் படத்தின் கதை தொடர்பான வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கத்தி படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து சர்கார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்ததை அடுத்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜேந்திரன் என்பவர் "செங்கோல்' படத்துக்காக எழுதிய கதையைத்தான் முருகதாஸ்  "சர்கார்' படமாக எடுத்துள்ளதாகவும், இரு கதைகளும் எழுத்தாளர் சங்கத்தில் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது என்றும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்கிறேன்' எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.   மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  "இயக்குநர் முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய மூன்று தரப்பும் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்ததாவது: பேசித் தீர்க்க நினைத்தோம்:  இரு கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். செங்கோல் கதையைத் தழுவியே சர்கார் கதை உள்ளது என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறினர். முருகதாஸிடம் பேசி பிரச்னையைத் தீர்க்க நினைத்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆரம்பத்திலிருந்தே வழக்குத் தொடர்வதில் ராஜேந்திரன் தெளிவாக இருந்தார். அவர் பக்க நியாயத்துக்காக அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வதை தடை செய்யவில்லை என்று கூறினார்.

Advertisement

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளது,  சமரச முடிவு குறித்து மனுதாரரின் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மனுதாரர் வழக்கறிஞர் இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் நவம்பர் 6 அன்று வெளியாகவுள்ள சர்கார் படத்துக்கு நேர்ந்த சிக்கல் இத்துடன் முடிவு பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தச் சமரசம் குறித்து முருகதாஸ் அல்லது சன் பிக்சர்ஸ் தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments