முகப்பு
செய்திகள்

என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: ஆர்யா - சயீஷா காதல் திருமணம் குறித்து சீதாலட்சுமி விளக்கம்!

முடிந்தது முடிந்ததுதான். நாம் முன்னகர்ந்து செல்வோம் என்று ஆர்யாவின் திருமணம் குறித்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:

முடிந்தது முடிந்ததுதான். நாம் முன்னகர்ந்து செல்வோம் என்று ஆர்யாவின் திருமணம் குறித்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடைசி 5 பேரில் ஸ்வேதா, அபர்ணதி, சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகியோர் இடம்பெற்றார்கள். பிறகு இறுதிச்சுற்றில் மூவர் இடம்பெற்றார்கள். மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரைத் தன்னால் தேர்வு செய்ய முடியாது. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஒருவரை இப்போது தேர்வு செய்தால் மற்ற இருவரும் ஏமாற்றம் அடைவார்கள். இந்த மேடையில் மற்ற இருவரையும் நிராகரித்தால் அவர்களுடைய பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்று ஆர்யா, இறுதியாகத் தன்னுடைய முடிவை அறிவித்தார். அதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்கான ஜோடியைத் தேர்வு செய்ய அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக காதலர் தினத்தன்று அறிவித்துள்ளார்கள் ஆர்யாவும் சயீஷாவும். பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலரவுள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துவருகிறார்கள்.

இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் சுசானா, அகதா, சீதாலட்சுமி ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் பங்குபெற்றார்கள். அவர்களில் சீதாலட்சுமி ஆர்யாவின் திருமணம் குறித்து சமூகவலைத்தளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஆர்யா - சயீஷா திருமணம் குறித்து கடந்த சில நாள்களாகப் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். முடிந்தது முடிந்ததுதான். நாம் முன்னகர்ந்து செல்வோம். என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நான் நலமாக உள்ளேன், இதிலிருந்து நகர்ந்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மற்றும் தொழிலில் கவனம் செலுத்துகிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும்  நன்றி என்று கூறியுள்ளார். 

சீதாலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.