நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணியினர் வேட்புமனு தாக்கல்
என் நேர்மையைக் காப்பாற்றவே நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்...
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா போட்டியிடுகின்றனர்.
நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் மனோபாலா மற்றும் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். விஷால் அணி சார்பாக இன்று 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.
என் நேர்மையைக் காப்பாற்றவே நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி கண்டிப்பாக வெற்றி பெறும். நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணி நிச்சயம் நிறைவேறும். 6 மாதத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று பேட்டியளித்துள்ளார் விஷால்.