நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் : உதயநிதி
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பிரசாரத்தில் உதயநிதி பேச்சு...
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் இன்று முதல் (மார்ச் 30) தொடங்கியுள்ளது.
முதல்வர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் மக்களிடையே உதயநிதி பேசியதாவது:
''பல திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக உள்ளது. அதனால், தேர்தலில் மீண்டும் உதிக்கப்போவது சூரியன்தான். ஒரே மாதத்தில் 10 லட்சம் மடிக்கணினிகளை திமுக அரசு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எண்ணற்ற திட்டங்களை அரசு அறிவித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு தமிழகததுக்குத் தேவையான நிதியை ஒதுக்கவில்லை. மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. ஆனால், தமிழ்நாடு எப்போதுமே தில்லிக்கு அவுட் ஆஃப் கட்ன்ட்ரோல் தான்.
கல்வி, மாநில, நிதி உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் அநீதிகளைப் பட்டியலிட்டு, ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல், மோடிக்கு ஏற்ற அடிமையாக ‘மேட் இன் தில்லி’ என்ற முத்திரையுடன் களம் காணும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த வேண்டியது அவசியமான ஒன்று.
மக்கள் பாராட்டும் வளர்ச்சித் திட்டங்கள் திராவிட மாடல் 2.0 - விலும் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம். பெரும் எழுச்சியுடன் கூடிய மக்கள் கூட்டம், நம் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்'' என உதயநிதி குறிப்பிட்டார்.