கமல் படங்களுக்கு வசனம் எழுதியதால் தான் எனக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது: கிரேஸி மோகன்
என்னுடைய எல்லா வெற்றிகளையும் கமலுக்குச் சமர்ப்பிக்கிறேன். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும்...
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.
இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, 2016-ல் கிரேஸி மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னுடைய எல்லா வெற்றிகளையும் கமலுக்குச் சமர்ப்பிக்கிறேன். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் நான் நாடகம் அமைக்கும்போது அவரே என்னுடைய விசிட்டிங் கார்டாக உள்ளார். நான் கிரேஸி மோகன் என்பதால் எனக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறதா? இல்லை. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் (1991), வசூல் ராஜா எம்பிபிஎஸ் (2004), அவ்வை சண்முகி (1996) & மகளிர் மட்டும் (1994) என அவருடைய பல படங்களுக்கு வசனம் எழுதியதால் தான். இந்தப் பேட்டி உள்பட எல்லாவற்றுக்கும் அவருடைய ஆலோசனையைக் கேட்பேன். என்னுடைய மனைவிக்குக் கடிதம் எழுதுவதாக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை கேட்பேன். எங்கள் நட்பின் பலம் அதுவே.
ரஜினிக்கு என் தந்தையை மிகவும் பிடிக்கும். அவரிடம் இரவு வேளைகளில் பேசுவார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன விஷயம் என்று ரஜினியிடம் செயலாளரிடம் கேட்டேன். அப்போது என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அருணாச்சலம் (1997) படத்துக்கு நான் வசனம் எழுதவேண்டும் என்று ரஜினி சொன்னார். என் வாழ்க்கையில் கிடைத்த போனஸ், ரஜினி.
கூட்டணிதான் கிரேஸி மோகனின் வெற்றிக்குக் காரணம். எங்கள் குழுவைச் சேர்ந்த கிச்சாவின் சகோதரி திருமணத்தில் தான், அவன் என்னிடம் சொன்னான், நாம் ஏன் ஒரு நாடக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது? நீ நாடகம் எழுது. அப்போதிருந்துதான் கிரேஸி கிரியேஷன்ஸ் தொடங்கியது என்று கூறியுள்ளார்.