செய்திகள்

நாடகக் கலைஞர்களுக்கு சுய உதவிக் குழுக்கள்: சுவாமி சங்கரதாஸ் அணி தேர்தல் அறிக்கை

DIN

தமிழக அரசின் உதவியுடன் நாடகக் கலைஞர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தி தரப்படும் என்று சுவாமி சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இரு அணியினரும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
பாண்டவர் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரின் தேர்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:
எந்த விதமான நிதி திரட்டலும், கலை நிகழ்ச்சிகளும் இன்றி சங்கத்தின் கட்டடம் 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். சங்க உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கப்படும். சங்க உறுப்பினர்களின் நலனுக்கான நிதியை சங்கமே செலுத்தும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்ப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்கள் மீண்டும் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் நாடகங்கள் நடத்தப்படும். அதற்கான மானியத் தொகையை சங்கமே செலுத்தும். சின்னத்திரை கலைஞர்களும் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதியோர் இல்லத்திட்டம் சேலம், சென்னை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் உடனடியாக செயல்படுத்தப்படும். உறுப்பினர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு மண்டபம் இலவசமாக வழங்கப்படும். 
கலைஞர்களின் நற்பணி, ரசிகர் மன்றங்களுடன் இணைந்து சமூக நற்பணிகள் செயல்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் போன்ற அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 
கமலை சந்தித்து ஆதரவு: இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், உதயா, குட்டி பத்மினி உள்ளிட்டோர் கமலைச் சந்தித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT