முகப்பு
செய்திகள்

என் படத்தை நான்கு பேர் மட்டும் பார்த்தார்களா?: விஷாலுக்கு நடிகர் உதயா கேள்வி!

அந்தப் பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான்.  இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன்...

Updated On : 11 மே, 2019 at 2:46 PM
பகிர்:

என்னுடைய படம்  மிகக் குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்தபோதும் மக்கள் அதை  ரசித்திருக்கிறார்கள் என்று விஷாலுக்கு உதயா பதில் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலுக்கு நடிகர் உதயா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வாய்ப்பினை தங்கள் திரைப்படம் அயோக்யா வெகு விரைவில் வெளியிடப்படவும், அரங்கம் நிறைந்த காட்சிகளாக, மகத்தான வெற்றி பெறவும் வாழ்த்துவதற்கு முதற்கண் பயன்படுத்திக் கொள்கிறேன். 

Advertisement

சமீபத்தில், நாளிதழுக்கு தாங்கள் அளித்த பேட்டியில், உத்தரவு மகாராஜா திரைப்படத்தைச் சரியான கதைக்களம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தைப் பார்த்ததாகக் கூறியிருந்தீர்கள்.   

அனைவருடைய கருத்துகள், விமரிசனங்கள் போன்றவை நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி அதை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். விமரிசனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்கிறேன். 

ஆனால்,  கண்மூடித்தனமான விமரிசனங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. துரதிர்ஷ்டவசமாக எனது படம் குறித்த உங்கள் விமரிசனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனது படத்தை திரையிடுவதற்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்தப் பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான்.  இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது படத்திற்குத் திரைத்துறையினர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடமிருந்தும் நேர்மையான விமரிசனங்கள் கிடைத்துள்ளன. இந்த நேர்மையான விமரிசனங்கள் எனக்கு திருப்தி அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஏனென்றால், இந்தப் படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிகக் குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்தபோதும் மக்கள் அதை  ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு திரைப்படத்தை விமரிசனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் விமரிசனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இன்ன பிற நோக்கங்களுக்காவோ இருக்கக்கூடாது. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக்காட்டும் நண்பரே.  சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. "விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்" என்ற  எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.