செய்திகள்

அமில வீச்சுக்கு ஆளான பிரபல நடிகையின் சகோதரி: 54 அறுவை சிகிச்சைகள், கைகொடுத்த காதலன் என மனதை உலுக்க வைக்கும் போராட்ட வாழ்க்கை!

எழில்

கல்லூரி நாள்களின் போது அமில வீச்சுக்கு ஆளான பிரபல நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டல், தன்னம்பிக்கையுடன் தான் போராடிய கதையை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கல்லூரி நாள்களின் போது எடுத்த புகைப்படம் இது. என்னிடம் ஒருவன் காதலைத் தெரிவித்தான். அதை மறுத்தேன். உடனே அவன் (இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு நடந்த சம்பவம்) என் முகத்தின் மேல் ஒரு லிட்டர் அமிலத்தை வீசினான். இதனால் 54 அறுவை சிகிச்சைகளை நான் மேற்கொள்ளவேண்டியிருந்தது. என்னுடைய இளைய சகோதரியும் (கங்கனா) சாவை நெருங்கும் வரையில் கடுமையாகத் தாக்கப்பட்டாள். ஏனெனில் எங்களுடைய பெற்றோர் அழகான, அறிவான, தன்னம்பிக்கையுள்ள பெண்களைப் பெற்றெடுத்ததால் . உலகம், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. அப்போது என் நண்பராக இருந்த என் கணவர், என் காயங்களைக் கழுவினார். பல வருடங்களாக மருத்துவமனைக்கு வெளியே நின்றார். ஆதரவளித்த சகோதரி மற்றும் பெற்றோரால் நான் மீண்டு வந்தேன். அதனால் என்னுடைய நிலையிலிருந்து தேறி வந்தததற்கு நான் மட்டும் காரணமல்ல. 

என்னுடைய அழகை இழந்ததற்கு பலரும் வருந்துகிறார்கள். ஆனால் உங்கள் கண் எதிரே உடல் உறுப்புகள் கரையும்போது அழகைப் பற்றிக் கடைசியாகத்தான் எண்ணுவீர்கள். 5 வருடங்களில் 54 அறுவைச் சிகிச்சைகள் செய்த பிறகும் மருத்துவர்களால் என்னுடைய காதை பழைய நிலைமைக்குக் கொண்டுவரமுடியவில்லை. ஒரு கண்ணை இழந்தேன். விழித்திரை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டேன். என் உடலின் இதர பகுதிகளிலிருந்த தோலை எடுத்து பலமாகக் காயம்பட்ட மார்பகத்தில் ஒட்டினார்கள். என் குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டேன்.

இப்போதும் என்னால் கழுத்தை அதிகமாக நீட்டமுடியாது. ஒட்டப்பட்ட தோல்களிலிருந்து அரிக்கும்போது செத்திருக்கலாம் எனத் தோன்றும். அமில வீச்சுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் என் சம்பவத்துக்குத் தொடர்புடைய குற்றவாளி சில வாரங்களில் பிணையில் வெளியே வந்துவிட்டான். வெளியே அவன் சுதந்தரமாக நடமாடுவதைக் கண்டபோது மனவேதனை ஏற்படும். அந்த வழக்கைத் தொடர்வதை நான் நிறுத்திவிட்டேன். இதுபோன்று குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை ஏன் அளிக்கக் கூடாது? 

பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவியாக இருந்த எனக்கு அழகு பெரிய விஷயமாக இருந்ததில்லை. ஆனால் என்னுடைய இளமையான காலம் முழுக்க மருத்துவமனைகளில் தான் கழிந்தது. அமில வீச்சால் 90 சதவிகிதக் காயங்கள் இருந்தும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு கிடையாது. ஏன்? நம் அமைப்பின் மீது இக்கேள்விகளை எழுப்பவேண்டும். குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவதை விடவும் எனக்குத் தற்போது கணவரும் மகனுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

மன தைரியத்துடன் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ள ரங்கோலியின் போராட்ட வாழ்க்கைக்குச் சமூகவலைத்தளங்களில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT