திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வந்த விஜய்!
நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய் குறித்து...
தற்போதைய செய்திகள்திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வந்த விஜய்!
நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய் குறித்து...
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ள தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை புறப்பட்டார்.
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.
செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிக்குள் கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் தவெக நிா்வாகிகள் அனுமதி கோரி பிப்ரவரி 28 இல் மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்படும் அடிப்படை வசதிகள் தொடா்பாக காவல் துறையினா் கேட்ட 32 கேள்விகளுக்கு தவெக நிா்வாகிகள் பதில் அளித்ததைத் தொடா்ந்து, 52 நிபந்தனைகளுடன் செவ்வாய்க்கிழமை அனுமதி கிடைத்தது.
இதனிடையே கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
மேலும், இந்த இடத்தை தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, மாநில நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
இந்த நிலையில், காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெறும் தவெக நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்பு தனது காரில் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செங்கிப்பட்டி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.
இந்த கூட்டத்தில் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தவெக சார்பில் தெரிவித்துள்ளனர். இதற்காக 4900 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மற்றும் வயது முதியவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது
மற்றும் அனுமதிச் சீட்டு பெறாத கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் நேரில் வருவதைக் தவிர்க்குமாறும், நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் பார்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் திருவிடைமருதூர் தனித்தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ கோவி செழியன் உயர்கல்வி அமைச்சராக இருந்து வருகிறார்.
2021 பேரவைத் தேர்தலில், திமுக ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.