செய்திகள்

30 களின் பிரபல குழந்தை நட்சத்திரம் ‘பேபி சரோஜா’ மறைவு!

சரோஜினி

பேபி சரோஜா, (சரோஜா ராமாமிர்தம்) 30 களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய குழந்தை நட்சத்திரம். அவர், வயோதிகம் காரணமான உடல்நலக் குறைவால் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88.

தமிழ் சினிமாவின் பீஷ்ம பிதாமகர்களில் ஒருவரான இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகளான பேபி சரோஜாவை தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் அவரது பெரியப்பாவே தான். 1931 ஆம் ஆண்டில் பிறந்தவரான பேபி சரோஜாவை அவரது இயற்பெயரிலேயே தனது மூன்று திரைப்படங்களில் நடிக்க வைத்தார் இயக்குனர் கே சுப்ரமண்யம். அவற்றில் முக்கியமானவை பால யோகினி மற்றும் தியாகபூமி.

பாலயோகினியில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய ‘கண்ணே பாப்பா’ பாடல் அன்றைய தேதியில் அகில உலகப் புகழ் பெற்ற பாடலாக அமைந்திருந்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் சரோஜா என்று பெயர் வைக்கத் தலைப்பட்டார்கள் அன்றைய பெற்றோர். அந்த அளவுக்கு பேபி சரோஜாவை வாஞ்சையுடன் தங்கள் வீட்டுக் குழந்தையாகக் கருதி நெக்குருகினார்கள் ரசிகர்கள். பேபி சரோஜாவின் குடும்பத்தில் பலரும் இசை விற்பன்னர்கள். அவரது அம்மாவே மிக அருமையான பாடகி தான். அத்துடன் அவர் அன்று நடித்த கல்கியின் ‘தியாகபூமி’ திரைப்படத்தில் மிகப்பெரும் இசை ஜாம்பவான்களில் ஒருவரான பாபநாசம் சிவனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் கூட அன்று பேபி சரோஜாவுக்கு கிட்டியது.
அதுமட்டுமல்ல, பாபநாசம் சிவன் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பரோ’  பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.

தியாகபூமிக்குப் பிறகு காமதேனு எனும் திரைப்படத்தில் பேபி சரோஜா நடித்தார். அத்திரைப்படத்தை இயக்கியவர் அன்று பாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்த நந்தலால் ஜஸ்வந்த்லால்.

சினிமா, இசை மட்டுமல்ல இசைக்கருவிகளை இசைக்க கற்றுக் கொள்வதிலும் பேபி சரோஜா மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா.

9 வயதில் சரோஜாவின் புகழ் ஜப்பான் வரையிலும் பரவியிருந்தது. அங்கு பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அப்போது பிரபலமாயிருந்தன. அதன் காரணமாகவே செர்லி டெம்பிள் ஆஃப் (புகழ்பெற்ற அமெரிக்க குழந்தை நட்சத்திரம்) தமிழ் சினிமா என்றொரு புகழும் சரோஜாவை வந்தடைந்தது.

திருமணமாகி மும்பைக்கு குடிபெயர்ந்தபின்னர் கூட பேபி சரோஜா சும்மா இருந்ததில்லை. தனது 70 வயதிலும் கூட ஜப்பானிய காகிதக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT