தூய்மைப் பணியாளர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்தார். கரோனா நிவாரண நிதிக்குப் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளார்கள். அவர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்ச தொகையை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது. தற்போதைய நிலைமையில் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என்பதால் மேலும் நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளார். ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தபிறகு மேலும் சில கோரிக்கைகள் வந்துள்ளன. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பல தரப்பினரும் உதவி கோரியுள்ளார்கள். மக்களிடமிருந்து கடிதங்களும் விடியோக்களும் வந்துள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது இதயம் உடைந்துபோகிறது என்று லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் லாரன்ஸ், அப்படத்துக்காகப் பெறும் சம்பளத்திலிருந்து ரூ. 25 லட்சத்தைத் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை 6382481658 என்கிற எண்ணுக்கு அனுப்பும்படி தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்துள்ளார்.