முகப்பு
செய்திகள்

பிரபாகரனைச் சித்தரிக்கும் காட்சியை நீக்கும் வரை எதிர்ப்பு தொடரும்: துல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை

எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக ...விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

வரனே அவஷ்யமுண்டு படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறியுள்ளார்.

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகரான துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன். துல்கர் தயாரித்த வரனே அவஷ்யமுண்டு என்கிற மலையாளப் படம் சமீபத்தில் வெளியாகி பிறகு ஒடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - அனூப் சத்யன்.

இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் எனப் பெயர் சூட்டியிருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல உள்ளதாகப் பலரும் துல்கருக்கும் இயக்குநருக்கும் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். இதையடுத்து இது தொடர்பான சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான். சமூகவலைத்தளங்களில் அவர் எழுதியுள்ளதாவது:

வரனே அவஷ்யமுண்டு படத்தில் வருகிற பிரபாகரன் நகைச்சுவை தமிழ் மக்களை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட காட்சியல்ல. பழைய மலையாளப் படமான பட்டண பிரவேஷம் படத்தில் வரும் நகைச்சுவை இது. கேரளாவில் அது ஒரு பொதுவான பெயர். படத்தில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கிறார்கள். என்னையும் இயக்குநர் அனூப்பையும் வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். எங்கள் தந்தைகளையோ மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

காயம்பட்டதாக உணரும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவே படங்கள் மூலமாகவோ யாரையும் காயப்படுத்த எண்ணவில்லை. இது உண்மையிலேயே தவறான புரிதல் என்று கூறியுள்ளார்.

இதேபோல இயக்குநர் அனூப்பும் தனது மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: அந்த நகைச்சுவைக் காட்சி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் குறிப்பிடவில்லை. துல்கர் குறிப்பிட்டதுபோல பிரபாகரன் என்பது கேரளாவில் பொதுவான பெயர். தமிழ் மக்கள் மீதும் அவர்கள் கலாசாரம் மீதும் உள்ள அன்பினால் தான் படத்தின் கதை சென்னையில் நடப்பதுபோல உருவாக்கினேன். காயம்பட்டதாக உணர்ந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

வரனே அவஷ்யமுண்டு படத்தில் பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒரு காட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்வியும் எழுகிறது. பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துக்கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம் பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →