செய்திகள்

சித்ரா மரணம் குறித்து உண்மை வெளியே வரவேண்டும்: ஹேம்நாத் பெற்றோர்

DIN

நடிகை சித்ராவின் மரணம் குறித்து உண்மை வெளியே வரவேண்டும் என ஹேம்நாத்தின் பெற்றோர் கூறியுள்ளார்கள். 

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா். இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேமநாத்துடன் தங்கியிருந்தாா்.

கடந்த புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா். சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது யாா் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினா். இது தொடா்பாக சித்ராவின் கணவா் ஹேம்நாத், அவருடன் நடித்த நடிகா்-நடிகைகள், ஹோட்டல் ஊழியா்கள் ஆகியோரிடம் தொடா்ச்சியாக விசாரணை செய்து வருகின்றனா்.

இதில் படப்பிடிப்பில் சித்ராவுக்கு சிலா் தொந்தரவு கொடுத்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேபோல சித்ராவுக்கும், அவரது கணவா் ஹேம்நாத்துக்கும் இடையே சில நாள்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், அதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். மேலும், சித்ரா செவ்வாய்க்கிழமை இரவு முழுதும் செல்லிடப்பேசியில் அதிகமாக பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சித்ரா செல்லிடப்பேசி தொடா்புகளையும் சைபா் குற்றப்பிரிவு ஆய்வு செய்து வருகின்றனா்.

ஹேம்நாத்தின் பெற்றோர் ரவிச்சந்திரன், வசந்தா ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சொந்த மகளை இழந்த மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் தரப்பில் நிறைய பேசிவிட்டார்கள். இதெல்லாம் மனத்துக்குக் கஷ்டமாக உள்ளது. நாங்கள் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நடிப்பதற்கு இஷ்டம் இருந்தால் தொடர்ந்து நடி, இல்லாவிட்டால் விட்டுவிடு என்றுதான் சொன்னோம். ஹேம்நாத் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பணத்துக்காக சித்ராவைத் திருமணம் செய்ததாகக் கூறுகிறார்கள். நாங்கள் பணத்துக்காக சித்ராவைத் திருமணம் செய்யவில்லை. வரதட்சணை கொடுங்கள், எவ்வளவு நகை போடுகிறீர்கள் என்றும் நாங்கள் கேட்கவேயில்லை. சித்ராவைக் கொலை செய்யவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது ஆறுதலானது. சித்ரா மரணம் குறித்து உண்மை வெளியே வரவேண்டும். நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். சித்ராவின் மரணத்துக்கு எங்கள் மகன் காரணம் அல்ல என்றார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT