முகப்பு
செய்திகள்

ஹிந்தி ‘கைதி’: கார்த்தி வேடத்தில் நடிக்கும் அஜய் தேவ்கன்

தமிழில் பெரிய வெற்றி பெற்ற கைதி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் அஜய் தேவ்கன் கதாநாயகன் வேடத்தில் நடிக்கவுள்ளார். 

Updated On : 28 பிப்ரவரி, 2020 at 10:58 AM
பகிர்:

தமிழில் பெரிய வெற்றி பெற்ற கைதி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் அஜய் தேவ்கன் கதாநாயகன் வேடத்தில் நடிக்கவுள்ளார். 

பிகில் படத்துக்குப் போட்டியாகக் கடந்த வருட தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம், ரூ. 100 கோடி வசூலித்துச் சாதித்தது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கினார். இசை - சாம் சிஎஸ்.

Advertisement

பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் ரூ. 100 கோடி வசூலித்தது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் கார்த்தி ஆகியோரைப் போல இதர தமிழ்த் திரைக் கலைஞர்களும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற செய்தியை இந்த வசூல் நிலவரம் வழியாக உணர்த்தியுள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். 

கைதி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழில் இப்படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஹிந்தி கைதியைத் தயாரிக்கின்றன. 

இந்நிலையில் ஹிந்தி கைதி குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கார்த்தி வேடத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 12 அன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிந்தியிலும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், இதற்கு அடுத்ததாக ஹிந்தி கைதியை இயக்கவுள்ளார். எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.