பத்மஸ்ரீ விருதைத் திருப்பி தந்து விடுவேன்: நடிகை கங்கனா ரணாவத்
நான் சொன்னதை என்னால் நிரூபிக்க முடியாவிட்டால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுத்து விடுவேன்.
சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக தான் கூறியவற்றைத் தன்னால் நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதைத் திருப்பித் தந்துவிடுவதாகப் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.
சுசாந்த் சிங் மரணம் குறித்து பிரபல நடிகை கங்கனா ரணாவத் விடியோ வெளியிட்டார். அவர் கூறியதாவது:
நடிப்புத் திறமை, பட வெற்றிகள், புத்திசாலித்தனம் இருந்தும் சுசாந்துக்குரிய மரியாதையை பாலிவுட் அளிக்கவில்லை. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் எப்படி மனரீதியாக பலவீனமாக இருக்க முடியும்? காய் போ சே படத்தில் அவருடைய திறமையை ஏன் யாரும் பாராட்டவில்லை? கல்லி பாய் போன்ற மோசமான படம் ஏராளமான விருதுகளைப் பெறுகிறபோது சீச்சோர் போன்ற நல்ல படம் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்?
நான் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியும் அதற்குரிய மரியாதையை எனக்கு அளிக்கவில்லை. சுசாந்தின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா? மதிப்பில்லாதவர் என்று தன்னைப் பற்றி சொன்னவர்களை நம்பியதுதான் சுசாந்த் செய்த பெரிய தவறு என்று கூறினார்.
சுசாந்த் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் அரசியல் தான் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். வாரிசுகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுவதால் வெளி ஆள்களால் பாலிவுட்டில் ஜெயிக்க முடியவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றியுள்ளார்கள். பாலிவுட்டில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், வாய்ப்புகள் குறித்து தன்னுடைய எதிர்ப்பை கங்கனாவும் பலமாகப் பதிவு செய்துள்ளார். மேலும் சுசாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா கொலையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மும்பைக் காவல்துறை எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. நான் மணலியில் இருப்பதாக அவர்களிடம் கூறினேன். நான் சொன்னதை என்னால் நிரூபிக்க முடியாவிட்டால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுத்து விடுவேன். நான் சொன்னது அனைத்தும் பொதுவெளியில் உள்ளது. பாலிவுட்டை விரும்புவதாக தாப்சியும் ஸ்வரா பாஸ்கரும் கூறலாம். உங்களுக்கு பாலிவுட் மட்டுமல்லாமல் கரண் ஜோஹரும் பிடிக்கும் என்றால் ஆலியா பட்டுக்கும் அனன்யாவுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உங்களுக்கும் ஏன் கிடைப்பதில்லை? அவர்கள் திரைத்துறையில் இருப்பதே வாரிசு அரசியலுக்குச் சான்றாகும் என்றார்.