அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடானது, தமிழ் வழியில் மட்டுமே கல்வி பயின்றவா்களுக்கு வழங்கப்படும் வகையில் இதற்கான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இந்த சட்டத் திருத்தத்தை மீன்வளம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்தாா்.
இந்நிலையில் இதற்குப் பாராட்டு தெரிவித்து கவிஞர் தாமரை ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:
அடித்து ஆடுகிறார் எடப்பாடியார்.
தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு!
தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும். தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி.
இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும்.
'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம்?
ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ், கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம்? அப்புறம் ஏன் கசக்க வேண்டும்?
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே! நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக! நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்னை, நம் பிரச்சினையில்லை!
பி.கு: அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக!
தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும்.
உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள் என்று எழுதியுள்ளார்.
அரசுப் பதவிக்கான கல்வித் தகுதியானது 10-ஆம் வகுப்பாக இருந்தால், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி மூலமே கல்வி பயின்று இருக்க வேண்டும். இதுபோன்று பட்டப் படிப்பாக இருக்கும்பட்சத்தில், ஒருவா் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு ஆகிய அனைத்தையும் தமிழ் வழிக் கல்வி மூலம் மட்டுமே பயின்றிருக்க வேண்டும். ஏதாவது ஒன்று மட்டும் தமிழ் வழியில் கற்று இருக்கக் கூடாது. அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியின் மூலம் பயின்றோருக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.