வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்து...
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் நேற்று (ஏப். 23) ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய வரலாறு, சாதனை படைத்த வாக்குப்பதிவு என்றெல்லாம் செய்திகளில் தெரிவிக்கப்பட்டாலும் உண்மை நிலைமையை விரிவாகப் பார்க்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளாலும் இந்த வாக்குப் பதிவு சதவிதம் உயர்ந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆரின் பெயரால் 97.37 லட்சம் (கிட்டத்தட்ட 1 கோடி!) வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதில், 66.44 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 26.9 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 3.98 லட்சம் பேர் இரட்டைப் பதிவைக் கொண்டிருந்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பிறகு, 18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் மற்றும் நீக்கப்பட்டவர்கள் உள்பட 27 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு முன்பு 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை, எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு 5.73 கோடியாக குறைந்தது.
வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலின்போதும் குறிப்பிட்ட அளவுக்கு (சுமார் 20 முதல் 30 லட்சம்) வாக்காளர்கள் அதிகரிப்பார்கள். இது இயல்பான ஒன்றானதாக இருக்கும். இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய - இளைய வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 14 லட்சம், இவர்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வம் காட்டியதும் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
எஸ்ஐஆர் பணிகளால் ஏறக்குறைய 10 விழுக்காட்டுக்கும் மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால், வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 4.63 கோடி வாக்குகள் பதிவான நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் 4.88 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, கடந்த தேர்தலைவிட சுமார் 25 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. இது ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரிக்கும் எண்ணிக்கைதானே அல்லாமல் வியப்படைவதற்கு ஏதும் இல்லை எனக் கருதப்படுகிறது.
சென்னையில் வாக்களித்தோர் குறைவு, பதிவு சதவிகிதம் அதிகம்!
சென்னை மாவட்டத்தில் 2021 தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 23.69 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. ஆனால், சதவிகித கணக்கின்படி, பார்த்தால் 2021 தேர்தலில் 60% சதவிகிதம், இந்த முறை 83.73 சதவிகிதம். சென்ற முறையைவிட அதிகம். வாக்களித்தவர்கள் குறைவு, இதைவைத்து, வாக்குப்பதிவு அதிகம் என்று எப்படி கூற முடியும்?
சென்னை மாவட்ட தொகுதிகளில் மொத்தம் 28,93,506 வாக்காளர்கள் உள்ளனர், இவர்களில் ஆண்கள் 13,95,716 பேர், பெண்கள் 14,96,921 பேர், இதர வாக்காளர்கள் 868 பேர்.
2021 ஆம் ஆண்டு சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்த நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு வெறும் 28.70 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்றால், இதற்குக் காரணம் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது மட்டுமே.
கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா தொற்று பாதிப்பு இருந்ததால்தான் குறைவான எண்ணிக்கையில் வாக்குப் பதிவானதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பெரிய ஆச்சரியமாக, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க வந்தவர்களால்தான், அதிகம் வாக்குப் பதிவு நடைபெற்றதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
கரூரில் அதிகப்படியான வாக்குப்பதிவு எப்படி?
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 92.65 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது தமிழகத்திலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு சதவிகிதமாகும்.
அரவக்குறிச்சி தொகுதியில் 91.74 சதவிகிதம், கரூரில் 93.39 சதவிகிதம், கிருஷ்ணராயபுரத்தில் 92.49 சதவிகிதம், குளித்தலையில் 92.85 சதவிகிதம் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 2,29,995 ஆகும். எஸ்ஐஆர் பணிகளில்போது 82,779 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இங்கும், இதனால்தான் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்துள்ளது எனலாம்.
அதிக வாக்குப்பதிவு பொதுவாக ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. அதிக வாக்குப்பதிவின்போதுகூட முந்தைய ஆட்சி தொடர்ந்த வரலாறும் உண்டு என்பதால், தேர்தல் வாக்கு சதவிகிதங்கள் வைத்தும் தேர்தல் முடிவுகள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் சாதகம் என்றோ பாதகம் என்றோ கூற முடியாது.
வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிறப்புத் தீவிர திருத்தமும் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த தேர்தல்களில் கூடுதலாக வாக்களித்தவர்கள்
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 2001 ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தவர்களைவிட சுமார் 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருந்தனர்.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட சுமார் 40 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருந்தனர்.
2016 தேர்தலில் 2011 ஆம் ஆண்டு தேர்தலைவிட கூடுதலாக 64 லட்சம் பேரும், 2021 தேர்தலில் 2016 தேர்தலைவிட கூடுதலாக 25 லட்சம் பேரும் வாக்களித்திருந்தனர்.
அதேபோலதான் இந்தாண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட 25 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
இதுவும் வழக்கமான நடந்து முடிந்த தேர்தல்களில் பெற்ற வாக்குப்பதிவு சதவிகிதம் போலதான் என்பது மே 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.