முகப்பு
செய்திகள்

மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு

மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 மார்ச், 2020 at 11:36 AM
பகிர்:

மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 24,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள். ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும்போது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கும்.

Advertisement

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போதும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. நாள் முழுக்க மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதுபற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகும். டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மார்ச் 28, சனிக்கிழமை முதல். காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு எபிசோடும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை இன்னொரு எபிசோடும் தினமும் ஒளிபரப்பாகும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.