முகப்பு
செய்திகள்

ஓடிடியில் முதல் நாளன்று அதிக பார்வைகள்: தில் பேச்சாரா சாதனையைத் தாண்டிய லக்‌ஷ்மி படம்

முதல் நாளன்று அனைத்து சாதனைகளையும் முறியடித்து டிஸ்னி ஹாட்ஸ்டார்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்‌ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. லக்‌ஷ்மி பாம் என்கிற தலைப்பு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் தணிக்கை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் லக்‌ஷ்மி என மாற்றப்பட்டது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகள் கிடைத்தன. இந்தியாவில் இந்த எண்ணிக்கையைப் பெற்ற முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றது.

கடந்த திங்கள் அன்று லக்‌ஷ்மி படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில் முதல் நாளன்று அனைத்து சாதனைகளையும் முறியடித்து டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி-யில் லக்‌ஷ்மி படத்துக்கு அதிக பார்வைகள் கிடைத்துள்ளதாக டிஸ்னி ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான தில் பேச்சாரா படத்துக்கும் இதேபோல அறிவிப்பை வெளியிட்டது டிஸ்னி ஹாட்ஸ்டார். இதையடுத்து தில் பேச்சாராவுக்கு முதல் நாள் கிடைத்த பார்வைகள் எண்ணிக்கையை லக்‌ஷ்மி படம் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவானது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.